Akila
அகிலா, தமிழ் எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்த இவர் கடந்த முப்பதாண்டுகளாக கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். கடந்த பதினைந்தாண்டுகளாக தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துத்துறைகளில் இயங்கி வருகிறார்.. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, திறனாய்வு என்று பலதளங்களில் படைப்புகளை வழங்கி வருகிறார்.. தன்முனைப்பு பேச்சாளராகவும், பெண்ணிய சிந்தனைகள் கொண்ட பெண்ணியவாதியாகவும், கதைசொல்லியாகவும், கல்லூரிகளிலும் , மேடைகளிலும் , ஊடகங்களிலும், இணையத்திலும் செயல்பட்டு வருகிறார். இளங்கலையில் பொறியியல் பட்டம், முதுகலையில் கணினி பயன்பாட்டியல் மற்றும் மனநல ஆலோசனை பட்டம் பெற்றுள்ள அகிலா,. கோயம்புத்தூரில் Insight Counselling என்னும் மனநல அமைப்பின் நிறுவனராக, மனநல ஆலோசகர் பணியில் உள்ளார்.. கணவன்- மனைவி, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் போன்றோருக்குள் உண்டாகும் குடும்ப உறவு சிக்கல்கள், பெண்களின் உளச்சிக்கல்கள், வேலை மற்றும் குடும்பம் சமநிலை செய்வதில் எழும் பதற்றம் மற்றும் மனச்சோர்வு சார்ந்த சிக்கல்கள், குழந்தைகளின் கற்றல் சார்ந்த குறைபாடுகள், பதற்றம், பயம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவற்றில் மனநல ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இவரது இருதய அறுவை சிகிச்சை அனுபவங்களை 'நின்று துடித்த இதயம்' என்னும் புத்தகமாய் எழுதியுள்ளார். அந்த நூலுக்காக நெருஞ்சி படைப்பாளுமை விருது பெற்றுள்ளார். இங்கிலாந்து சென்றுவந்த பயண அனுபவங்களை அந்நாட்டின் சமூகம், அரசியல் மற்றும் மக்களின் வாழ்முறைகளை எழுத்தாக்கி, 'இங்கிலாந்தில் 100 நாட்கள்' என்னும் பயண இலக்கிய நூல் படைத்துள்ளார்..ஆங்கிலத்தில் 'I Named The Village' என்னும் கவிதை தொகுப்பு வெளிவந்துள்ளது. 'தவ்வை' என்னும் முதிய பெண்ணின் கதையை சொல்லும் நாவலை எழுதியுள்ளார். இவருடைய யானைகளின் பாதைகள் குறித்த 'வலசை' சிறுகதை அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டியில் (2017) இரண்டாம் பரிசு பெற்றது. 'மிளகாய் மெட்டி' என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் படைப்பாளுமை விருதைப் பெற்றது. 'மண்சட்டி' சிறுகதை தொகுப்புக்கு தேனி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 'அசோகமித்திரன் நினைவு இலக்கிய விருது' (2019) வழங்கப்பட்டது. கவிதை,சிறுகதை, நாவல், கட்டுரை மற்றும் பயண இலக்கியம் என இதுவரை பத்தொன்பது நூல்களை எழுதியுள்ளார். சில நூல்கள் அச்சில் உள்ளன.