x

Sujatha (Rangarajan)

சுஜாதா (மே 3, 1935 – பிப்ரவரி 27, 2008) தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் ஐம்பதாண்டுகளாக பல லட்சம் வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953-ஆம் ஆண்டு 'சிவாஜி' என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கட்டுரைகள், திரைப்படங்களுக்கான திரைக்கதை - வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் ஆவார். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி. (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. (மின்னணுவியல்) கற்றார். அதன் பின்னர் ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்தார். டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டுகள் அந்த அரசுப் பணியில் இருந்த சுஜாதா, பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும், மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார். அறிவியலை, ஊடகம் மூலமாக, மக்களிடம் கொண்டு சென்றதற்காக, அவரைப் பாராட்டி, 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' அவருக்கு 1993-ஆம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. மின்னணு வாக்குப்பதிவுப் எந்திரத்தை உருவாக்கும் குழுவில் இவர் இருந்தார். அந்த மின்னணுப் பொறியை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார். இப்பொறியை உருவாக்கிய பணியில் முக்கிய பொறுப்பில் இருந்ததற்காக அவருக்கு ‘வாஸ்விக்’ விருது வழங்கப்பட்டது. திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள் அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு - திரைப்படம்), காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும், ஆனந்த தாண்டவம், சைத்தான். திரைக்கதை-வசனம் எழுதி பணியாற்றிய திரைப்படங்கள் ரோஜா, இந்தியன், ஆய்த எழுத்து, பாய்ஸ், முதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், அந்நியன், உயிரே, விசில், வரலாறு, செல்லமே, கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி, எந்திரன் – 1, சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, அவருக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.