Vallikannan.
வல்லிக்கண்ணன் (ரா.சு.கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) ஒரு தமிழ் எழுத்தாளர். 40-களின் துவக்க ஆண்டுகளில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் என ரா.சு.கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத் துவங்கினார். அந்த சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன் பெயரை கண்ணன் எனவும் மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகினார். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய ‘பெரிய மனுஷி’ எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றது. 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற விமர்சன ஆய்வு நூலுக்காக இவருக்கு 1978-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.