Ki.Rajanarayanan
கி.ரா என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021) ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என்ற பெயர் பெற்றவர். கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைசெவல் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். 1958-ல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016-ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தனது இறுதி காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் நாள் தனது 99-ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.