A.K.Perumal
அ.கா.பெருமாள் (பிறப்பு: 1947, பறக்கை, குமரி மாவட்டம்), நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். களத்தில் சிதறிக்கிடக்கும் வழக்காறுகளைச் சேகரித்து, ஆராய்ந்து எழுதுவது இவர் பணி. நாகர்கோவிலில் வசித்து வரும் அ.கா.பெருமாள் நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், வரலாற்றாசிரியர்.இவரது தந்தை அழகம்பெருமாள். அம்மா பகவதிஅம்மா. தந்தை மலையாள ஆசிரியர். நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர். குமரிமாவட்டத்தை விரிவான வரலாற்றாய்வுக்கு இலக்காக்கிய ஆய்வாளர். தமிழிலக்கியம் முதுகலைப்பட்டம் பெற்றபின் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியலில் “நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். அப்போது இவருடன் ஆய்வுத்தோழராக விளங்கியவர் உலகப்புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியலாளரான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் இருந்தார். ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நாட்டார் வழக்காற்றியலிலும் இலக்கியத்திலும் இவரை ஈடுபட வைத்தவர் வெங்கட் சாமிநாதன். வெங்கட் சாமிநாதன் நடத்திய யாத்ரா இதழை இவர் நீண்டகாலம் வெளியிட்டு வந்தார். இவர் எண்பது நூல்களை எழுதியுள்ளார். இதில் இலக்கிய வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், குமரி மாவட்ட வரலாறு,கல்வெட்டியல், சிற்பவியல், கோவில்கலை என்பவை பொதுவான தலைப்புகளாகும். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் படைப்புகளுக்கு ஆய்வுப்பதிப்புகள் பதிப்பித்தார். கவிமணியின் கட்டுரைகளைத் தேடி எடுத்து அச்சில் கொண்டு வந்தார். தோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகள் செய்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதில் “தோல்பாவைக்கூத்து” விரிவான அறிமுக நூலாகும். இவரது “ராமாயண தோல்பாவைக்கூத்து” கூத்துக்குரிய வாய்மொழி ராமாயணப்பிரதியின் பதிவு செய்யபப்ட்ட வடிவம், விரிவான ஆய்வுக் குறிப்புகள் கொண்டது. குமரிமாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளைப் பற்றிய ஆய்வு, பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்துள்ளார். பிராந்திய நுண்வரலாறு என்ற நோக்குடன் ஆய்வு செய்த முன்னோடி ஆய்வாளர் இவர். தென்குமரியின் கதை சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் , பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில், தென்குமரிக்கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவை கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றி விரிவாக ஆராயும் நூல்களாகும். திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயில் குறித்த நூல் ஒன்றையும் இவர் எழுதியுள்ளார். குமரிமாவட்ட வரலாற்றுக்கு முக்கியமான ஆவணங்களான முதலியார் ஓலைச்சுவடிகளை (அழகியபாண்டிபுரம் முதலியார் வீட்டில் கிடைத்த இச்சுவடிகள் பத்து நூற்றாண்டுக் கால நிர்வாக நடவடிக்கைகள் பற்றியவை. இவற்றுக்கு ஆய்வுக்குறிப்புடன் நூல் வடிவம் கொடுத்துள்ளார்.