A.Madhavan
ஆ.மாதவன் (7 பிப்ரவரி, 1934 – 5 ஜனவரி, 2021) கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்து வசித்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர், 1955-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதி வந்த முக்கிய தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது பல சிறுகதைகள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. திராவிட இயக்க எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராக ஆனவர் மாதவன். கிருஷ்ண பருந்து உட்பட 3 நாவல்களை எழுதியுள்ளார். திருவனந்தபுரத்தில் செல்வி ஸ்டோர்ஸ் என்ற கடையை நடத்தி வந்த மாதவன், அவர் கடை அமைந்திருந்த சாலைத் தெருவைப் பின்னணியாகக் கொண்டு பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர், விமர்சகர்களால் ‘கடைத்தெருவின் கதைசொல்லி’ என்று அழைக்கப்படுகிறார். தமிழிலக்கியத்தில் ஆ. மாதவன் கதைகள் வழியாகவே ஒரு கடைத்தெரு இலக்கியப்பதிவு பெற்றது. 1974-ல் இவரது முதல் நாவலான ’புனலும் மணலும்’ வெளி வந்தது. அந்நாவல் அதன் யதார்த்தத்துக்காகப் பெரிதும் கவனிக்கப்பட்டது. 1982-ல் வெளிவந்த கிருஷ்ணப்பருந்து மாதவனின் மிகச்சிறந்த நாவல் என்று விமர்சகர்களால் புகழப்படுகின்றது. 1990-ல் அவரது மூன்றாம் நாவலான ’தூவானம்’ வெளிவந்தது. இவரது ‘இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வு நூலுக்காக 2015-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.