A.Madhaviah
அ.மாதவையா (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். அ.மாதவையா எழுதிய 'பத்மாவதி சரித்திரம்' தமிழில் வெளிவந்த முதல் ஐந்து நாவல்களில் ஒன்று. பெண் கல்வி, பெண்களின் மறுமணம் ஆகியவற்றை முன்வைத்த சமூக சீர்திருத்தவாதி. ஆங்கிலத்திலும் கிளாரிந்தா போன்ற நாவல்களை எழுதியவர். அ. மாதவையா தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887-ஆம் ஆண்டில் முடித்தார். நெல்லையில் வீடுகளில் பணம் கொடுத்து தங்கி சாப்பிட்டு படித்தார். இந்த வாழ்க்கையை தன் நாவல்களில் அ.மாதவையா சித்தரித்துள்ளார். நெல்லையில் வாழ்ந்த லட்சுமண போத்தி என்பவரிடம் மரபான முறையில் தமிழ் கற்றார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். அ.மாதவையா தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். இளங்கலை படிப்பை (B.A) 1892-ல் முதல் மாணவராக முடித்தார். மாதவையா பட்டம் பெற்றதும் தான் பயின்ற சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1893-ல் எம்.ஏ படித்துக்கொண்டிருக்கும்போது உப்பு சுங்க இலாகா (Salt and Abkari department) நடத்திய தேர்வில் முதலிடம் வந்து உப்பு ஆய்வாளர் (Salt Inspector) ஆக பணியிலமர்ந்தார். பணிக்காலத்தில் அவருடைய மேலதிகாரியான வெர்னன் என்பவர் (H.A.B.Vernon) அவர் போதிய பணிவுடன் இல்லை என்று சொல்லி குறிப்புகள் எழுதியிருக்கிறார். ஆங்கில இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மூப்பை மீறி அ.மாதவையாவுக்கு கிடைக்கவேண்டிய பணி உயர்வை பெற்றார். அதற்கு எதிராக புகார் அளித்தமையால் மாதவையா ஆந்திராவிலுள்ள கள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணிமாற்றம் செய்யப்பட்டார். அங்கே மிக வலுவாக இருந்த போதை வணிகர்களின் குழுவை மாதவையா துணிச்சலாக கைத்துப்பாக்கியுடன் உள்ளே புகுந்து அடக்கினார். அதற்காக பரிசும் பதவி உயர்வும் பெற்றார். 1917-ல் அரசு வேலையில் இருந்து முன்னரே ஓய்வுபெற்று சென்னைக்கு வந்தார். அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டார். அ.மாதவையா சென்னை பல்கலைக்கழக செனெட் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டார். இறுதிவரை அப்பதவியில் இருந்தார்.