A.muthulingam
அ.முத்துலிங்கம் பிறப்பு: 1937 ஜனவரி – 19) இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து,கனடாவில் வசித்து வருகிறார். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'அக்கா' சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க. கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார். நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. நாம் அறிந்த உலகங்களுக்கு, நாம் அறியாத பாதைகளில் அவை நம்மை இட்டுச் செல்கின்றன. பிரமிக்க வைக்கின்றன.