Barathidasan
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும்புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். இவர், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுகிறார். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். இவர் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே அதிகமாகும். தமிழ்மொழிப் பற்றும், முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலால், இரண்டாண்டில், கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார். பதினெட்டு வயதிலேயே அவர் அரசினர் கல்லூரித் தமிழாசிரியாரானார். புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கிய பாரதிதாசன் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். பிரபல எழுத்தாளராகவும், திரைப்படக் கதாசிரியராகவும், பெரும் கவிஞருமாகவும் இருந்த பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946, ஜூலை 29-ல் அறிஞர் அண்ணாவால், "புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இவரது நினைவாகவே, மத்திய மண்டலத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்துக்கு ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு தனது 73-வது வயதில் மறைந்தார். அவர் மறைந்து ஐந்தாண்டுகள் கழித்து, அவருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு, 1969-ல் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.