D.Selvaraj
டேனியல் செல்வராஜ் சுருக்கமாக டி.செல்வராஜ், ஜனவரி 14,1938 - டிசம்பர் 20, 2019) ஓர் முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். நெல்லை தென்கலம் சிற்றூரைச் சேர்ந்த செல்வராஜ் திண்டுக்கல்லில் வசித்து வந்தார். பல்வேறு சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ள்ளார். 1975-இல் செம்மலர் எழுத்தாளர்கள் 32 பேர்கூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியபோது அதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் .இவர் பொதுவுடமைக் கொள்கையில் இருந்தவர். திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தான அரசுபள்ளிகளில் கல்வி பயின்று, நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ.பொருளாதாரம் பயின்றார். கல்லூரிக் காலத்திலேயே நெல்லையில் தோழர்கள் தி.க.சிவசங்கரன், தொ.மு.சி.இரகுநாதன், பேராசிரியர் நா. வானமாமலை போன்ற இடதுசாரி இலக்கியவாதிகளுடன் நட்பு ஏற்பட்டது. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார். அப்போது ரகுநாதன் வெளியிட்டு வந்த ‘சாந்தி’ இலக்கிய இதழில் அவருடைய படைப்புகள் வெளியாகின. ‘ஜனசக்தி’ வார மலர்களிலும் அவரது கதைகள் வெளியாகின. சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலை சட்டம் பயின்றார். கல்லூரியில் படிக்கின்ற காலகட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் வார ஏடான ‘ஜனசக்தி’யிலும், இலக்கிய இதழான ‘தாமரை’யிலும் பகுதி நேரமாகப் பணியாற்றினார் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் நாவல்களும் எழுதியியுள்ளார். திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் ‘தோல்’ என்ற படைப்பிற்காக 2012-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.