Na.Pichamurhy
ந.பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார். பிச்சமூர்த்தி, ‘நவ இந்தியா’ பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. "இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன. பிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஓர் ஆண்டு காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சந்நியாசத்தை விரும்பி ஊர் ஊராக அலைந்திருக்கிறார். பிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராக இருந்த பிச்சமூர்த்தி 1976-ஆம் ஆண்டு தனது 76-வது வயதில் மறைந்தார்.