Rajam Krishnan
ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) மூத்த தமிழக பெண் எழுத்தாளர் ஆவார். 1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15-வது வயதிலேயே அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின்னர், சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார். பொதுவாக தனது படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு வாழும் மக்களோடு நெருங்கிப் பழகி, உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டு வந்தவர். 1970-ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள உப்பளத் தொழிலாளர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மணிகள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக்கொலை உள்ளிட்ட பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி ராஜம் கிருஷ்ணன் எழுதியுள்ளார்.