x

Stephen William Hawking

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (ஜனவரி 8 , 1942 -14 மார்ச் 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர் ரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, "ஹாக்கிங் கதிரியக்கம்" என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன்முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார். ஐக்கிய அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றார். 2002-ஆம் ஆண்டில், பிபிசி நடத்திய பிரித்தானியாவின் 100 பெரும் புள்ளிகள் கணிப்பில் 25-வதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979 முதல் 2009 வரை கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர், தான் உருவாக்கிய கோட்பாடுகளைப் பற்றியும், அண்டவியல் தொடர்பிலும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ்பெற்றார். இவரது "காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்" என்ற புகழ்பெற்ற கட்டுரைத் தொடர் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் இதழில் 237 வாரங்களாக வெளிவந்து சாதனை புரிந்தது. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இவரது அறிவியல் நூல்கள் பலரையும் கவர்ந்துள்ளன.

Related Products