Subashini Kanagasundaram
சுபாஷிணி கனகசுந்தரம், மலேசிய தமிழ் எழுத்தாளரும், தமிழ் ஆய்வாளரும், தமிழ் ஆர்வலரும், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவரும், அதன் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். சுபாஷிணி மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் தனது இளமைக் காலக்கல்வியைத் தொடங்கி, பின்னர் ஆத்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள தெற்கு குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் கணினித்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் ஜெர்மனி சென்று ஸ்லிங்கன் பல்கலைக்கழகத்தில் கணினி இயந்திரவியல் துறையில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து இங்கிலாந்தின் வார்ன்பாரோ கல்லூரியில் தொலைத்தொடர்புத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தமிழ் கணினித்துறை ஆய்வுகளுக்காக உருவான 'உத்தமம்' என்ற அமைப்பில் அதன் தொடக்கம் முதல் பங்களித்து வருகின்றார். உத்தமத்தின் செயற்குழுவில் தொடர்ச்சியாக 2001-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார். 2000ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை என்னும் அமைப்பை முனைவர். நா.கண்ணனுடன் இணைந்து ஏற்படுத்தி இணைய வெளியில் தமிழர் வரலாற்றையும், புராதனச் சின்னங்களையும், அரிய தமிழ்ச்சுவடி ஆவணங்களையும், சிற்பங்களையும் பாதுகாக்கும் முயற்சியைத் தொடங்கினார். இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழ் ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. சுபாஷிணி பலமுறை தமிழகம் சென்று அங்கே களப்பணிகளை மேற்கொண்டு வாய்மொழி இலக்கியங்கள், சிற்பங்கள், கோயில் கட்டுமானங்கள், கல்வெட்டுக்கள், பண்டைய வழிபாட்டு முறைகள், தமிழர் பண்டைய வாழ்வியல் கூறுகள் என பலதரப்பட்ட தகவல்களை எண்ணிம வடிவில் சேகரித்து ஆய்வுகள் செய்து தொடர்ந்து மின்வெளியில் வெளியிட்டு வருகின்றார். இந்த முயற்சியின் வழி இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தின் அரிய தமிழ் நூல்கள் சிலவும் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் இவர் டென்மார்க், கோப்பன்ஹாகன் அரசு நூலகத்தின் சேகரிப்பில் இருக்கும் லூத்தரன் பாதிரிமார்களின் 300 ஆண்டுகள் பழமையான முப்பத்தெட்டு தமிழ் கையெழுத்து ஓலைச்சுவடி நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார்.