x

Suba.Veerapandian

‘சுபவீ’ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் (பிறப்பு: ஏப்ரல் 22, 1952), சிறுவயது முதலே, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். இவர், தொடக்கக்கல்வியையும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் காரைக்குடியில் பெற்றார். பின்னர் காரைக்குடியில் உள்ள அழகப்பர் அரசு கலைக் கல்லூரியில் பயின்று இயற்பியலில் அறிவியல் இளநிலை பட்டம் பெற்றார். தமிழிலக்கியம் பயின்று கலை முதுவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். இறை மறுப்பாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். பழம்பெரும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இவரது அண்ணன் ஆவார். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருபவர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, தன் 45-வது வயதில் விருப்ப ஓய்வு பெற்ற சுபவீ, “ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்” என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007-ஆம் ஆண்டு, ‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளராக உள்ளார். கல்லூரிப் பேராசிரியராக இருந்தபொழுதே சுட்டி, விடுதலை, உண்மை, தென்மொழி உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதினார். பின்னர் இனி, நந்தன் வழி, தாயகம் ஆகிய இதழ்களின் சிறப்பாசிரியராகப் பொறுப்பு வகித்தார். தற்பொழுது கருஞ்சட்டைத் தமிழர் என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியராக உள்ள சுபவீ, இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Related Products