Sundara Ramaswamy
சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார். 1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. சுந்தர ராமசாமி மூன்று நாவல்களை எழுதியுள்ளார். அவரது முதல் நாவலாகிய ‘ஒரு புளியமரத்தின் கதை’ 1966-ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒரு புளியமரத்தை மையமாகக் கொண்டு நாகர்கோயில் என்னும் சிறுநகரில் மன்னராட்சிக் காலத்தில் இருந்து ஜனநாயகக் காலம் வரை வாழ்க்கை மாற்றம் நிகழ்வதைச் சித்தரித்த நாவல் இது. அவரது இரண்டாவது நாவலான ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ 1981-ல் வெளிவந்தது. வழக்கமான கதைசொல்லும் வடிவில் இருந்து வேறுபட்டிருந்தது ஜே.ஜே.சிலகுறிப்புகள். ஏற்கனவே நகுலனின் நினைவுப்பாதை நாட்குறிப்பு வடிவில் இருந்தாலும், பரவலாக இலக்கியச் சூழலில் வாசிக்கப்பட்ட நாவல் ஜே.ஜே/சில குறிப்புகள். அவரது மூன்றாவது நாவலான ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ 1998-ல் வெளிவந்தது. சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுதி ‘அக்கரைச் சீமையிலே’ 1959-ல் வெளிவந்தது. தொடர்ந்து 1964-ல் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுதியான ‘பிரசாதம்’ வெளிவந்தது. ஏழாண்டு இடைவெளிக்குப்பின் அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுதி ‘பல்லக்கு தூக்கிகள்’ 1974-ல் வெளிவந்தது. குறுநாவல் தொகுதி ‘திரைகள் ஆயிரம்’ 1975-ல் வெளிவந்தது. 1981-ல் ‘பள்ளம்’ என்னும் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. அவருடைய முழுச்சிறுகதைகளும் ‘சுந்தர ராமசாமி சிறுகதைகள்’ என்னும் முழுத்தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது.