x

Thanjai Prakash

தஞ்சை பிரகாஷ் (பிறப்பு:1943 - ஜுலை 27, 2000) தமிழ் எழுத்தாளர். இலக்கியச் செயல்பாட்டாளர். பதிப்பாளர். தஞ்சையில் கதைசொல்லி என்னும் அமைப்பை நடத்தியவர். தஞ்சை பிரகாஷ் நெடுங்காலம் தன் நாவல்களை கைப்பிரதியாகவே வைத்திருந்தார்.பின்னர் அவை தொடர்ச்சியாக வெளியாயின. மீனின் சிறகுகள், கரமுண்டார் வீடு, கள்ளம் ஆகிய அவருடைய நாவல்கள் அவற்றின் சுதந்திரமான பாலியல் சித்தரிப்புக்காக புகழ்பெற்றவை. தஞ்சை பிரகாஷ் முதன்மையாக ஓர் இலக்கியச் செயல்பாட்டாளர். தஞ்சையை மையமாக்கி தொடர்ச்சியாக இலக்கியச் செயல்பாடுகளை நடத்தினார். சிற்றிதழ்கள் நடத்துவது, இலக்கியக்கூட்டங்களை ஒருங்கிணைப்பது, இலக்கியநூல்களைப் பதிப்பது ஆகியவை முதன்மைச் செயல்பாடுகள். க.நா.சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன், இலங்கை இலக்கியவாதியான கே.டானியல் ஆகியோரை தமிழ்ச்சூழலில் முன்னிறுத்தியவர் தஞ்சை பிரகாஷ். க.நா.சுப்ரமணியத்தின் அச்சேறாமலிருந்த நூல்களை பதிப்பித்தார். வெங்கட்சாமிநாதன் எழுதுவதற்காகவே வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார் (வெசஎ) என்னும் சிற்றிதழை நடத்தினார். அவர் நடத்திய இலக்கிய இதழ்களில் படைப்பாளிகளை அறிமுகம் செய்து தொடக்ககாலப் படைப்புக்களை செம்மை செய்தார். 1975–ல் அவரது 'பி.கே. புக்ஸ்’ பதிப்பகத்தில் க.நா.சு.வின் 'பித்தப்பூ’, கே.டானியலின் 'பஞ்சமர்’, கி.ராஜநாராயணனின் 'கிடை’, அம்பையின் 'சிறகுகள் முறியும்’ போன்ற முக்கியமான நூல்களைக் கொண்டு வந்தார்.சாகித்ய அகாதமிக்காக க.நா.சு. வாழ்க்கை வரலாற்று நூலை, காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது வாழ்நாளின் கடைசி காலத்தில் எழுதி முடித்தார்.

Related Products