P. Singaram
ப.சிங்காரம் (ஆகஸ்ட் 12, 1920 - டிசம்பர் 30, 1997), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தனது வாழ்வின் பெரும்பகுதியை தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் கழித்தவர். இவர், இரண்டு நாவல்களை மட்டுமே எழுதியிருந்தாலும், மிகச் சிறந்த நாவல் எழுத்தாளராக அறியப்படுகிறார். இவரின் "புயலிலே ஒரு தோணி" நாவல் எல்லா காலத்துக்கும் ஏற்றவாறு எழுதப்பட்ட நாவல் என்று தமிழ் இலக்கிய அறிஞர்களால் குறிப்பிடப்படுகின்றது. இவர் தனது ஆரம்பக் கல்வியை சிங்கம்புணரி ஆரம்பப் பள்ளியில் படித்தார். மேற்படிப்பிற்காக, மதுரையிலுள்ள செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். இவர் தனது 18-வது வயதில் எஸ். கே. சின்னமுத்து பிள்ளையுடன் பணிபுரிய இந்தோனேசியாவிலுள்ள மேடானுக்குச் சென்றார். அங்கு திருமணம் செய்து கொண்டார். இவரது 25-வது வயதில், இவரின் மனைவி மற்றும் குழந்தை பேறுகாலத்தின் போது இறந்து விட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மீண்டும் இந்தியா வந்து மதுரையில் வசித்தார். சிங்காரம் 1946-ல் இந்தியா திரும்பியவுடன், மீண்டும் இந்தோனேசியா செல்ல திட்டமிட்டார். அது இயலாத காரணத்தால், மதுரையிலுள்ள 'தினத்தந்தி' நாளேடு நிறுவனத்தில் பணிபுரிந்து 1987-ல் விருப்ப ஓய்வு பெற்றார். அவர் யாருடனும் அதிகமாக நெருங்கிப் பழகவில்லை. 50 ஆண்டுகளாக மதுரையிலுள்ள ஒய். எம்.சி.ஏ. விடுதியில் தனியாக வாழ்ந்தார். எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி மற்றும் பலர் அவரைச் சந்தித்து பேசியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துக்கூறி மீண்டும் அவரை எழுதுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் சிங்காரம் அவர்களின் வேண்டுகோளைத் தவிர்த்து தான் எழுதப்போவதில்லை என்று கூறியுள்ளார். 1997-ல், தனது வருமானங்களை சமூகநல அறக்கட்டளைக்கு வழங்கினார். இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார். டிசம்பர் 30, 1997-ல் காலமானார்.