x

Kalaignar M. Karunanidhi

முத்துவேல் கருணாநிதி ஜூன் 3, 1924 - ஆகஸ்ட் 7, 2018) எழுத்தாளரும், இந்திய ஒன்றியத்தின் முன்னணி அரசியல் தலைவரும் ஆவார். தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறை (1969 – 1971, 1971 – 1976, 1989 – 1991, 1996 – 2001, 2006 – 2011) பொறுப்பு வகித்தவரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை (49 ஆண்டுகள்) பொறுப்பு வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழ்நாடு முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர், தமிழ்த் திரையுலகில் கதை, திரைக்கதை – வசனம் ஆகிய பணிகளில் எழுபது திரைப்படங்களுக்கு மேல் பங்களித்துள்ளார். 'தூக்குமேடை' நாடகத்தின் பொழுது நடிகர் எம்.ஆர்.ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டத்தை அளித்தார். அன்று முதல், இன்று வரை ‘கலைஞர்’ என்னும் அப்பெயராலேயே மக்களால் அழைக்கப்படுகிறார். இவர் 70 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும், 40 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் எழுதியுள்ளார். மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000-க்கும் மேற்பட்ட அரசியல் கடிதங்களை எழுதியிருக்கிறார். ‘கரிகாலன்’ என்னும் பெயரில் ஆயிரக்கணக்கான கேள்வி - பதில்களை எழுதியிருக்கிறார். இவை, தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் ஆயிரக்கணக்கான தலையங்கங்களையும் எழுதியுள்ளார். இவரின் படைப்புகள் இதுவரை 190 நூல்களாக வெளிவந்திருக்கின்றன. இலக்கியம் மற்றும் அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த எழுத்தாளராகவும், அரசியல் தலைவர்களுள் முன்னணித் தலைவராகவும் திகழ்ந்த இவர், 2018 ஆகஸ்ட் 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் வயதில் சென்னையில் காலமானார்.