S.Theodore Baskaran
சு.தியடோர் பாஸ்கரன் (பி. 1940) ஒரு தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட வரலாற்றாளர், சூழலியல் ஆர்வலர் என அறியப்படுபவர். பாஸ்கரன் தாராபுரத்தில் பிறந்தார். பாளையங்கோட்டை செயிண்ட். ஜான் கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படித்து பின்னர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலை (வரலாறு) பட்டம் பெற்றார். பட்டம் பெற்றவுடன், தமிழக அரசு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார். 1964-ல் இந்திய தபால் துறையில் சேர்ந்தார். திருச்சியில் இரண்டாண்டுகள் கோட்ட மேலாளராகப் பணிபுரிந்தபின் வேலூருக்கும் பின்னர் மேகாலயாவிற்கும் பணிமாற்றம் செய்யப்பட்டார். அவர் மேகாலயாவிலிருந்த போது 1971-ல் வங்காளதேச விடுதலைப் போர் மூண்டது. அப்போது பாஸ்கரன் தபால் தந்தித் துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் தனி அதிகாரியாக (Special Officer For War Efforts) நியமிக்கப்பட்டார். தபால் துறையில் பணிபுரிந்து கொண்டே திரைப்பட வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தபால் துறையில் படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டின் தலைமை தபால் அதிகாரியாக (Chief Postmaster General) ஓய்வு பெற்றார். தற்பொழுது பெங்களூரில் வசித்து வரும் பாஸ்கரன் 15-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை எழுதியுள்ளார்.